நேற்றைய வரலாற்றையும், நிதர்சன நிகழ்வுகளையும், நாளைய தொழில்நுட்பத்தையும் பாமரனுக்கும் எளிதில் சேர்க்கும் வலிமை மிக்க ஊடகம் சினிமா என்பதை மறுக்கவியலாது. பல்நோக்கு சிந்தனைக் குறைவின் வெளிப்பாடு இஸ்லாமிய சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதால், சினிமாத்துறை பெரும்பான்மை முஸ்லிம்களால் கவனிக்கப்படாமலேயே விட்டுவிடப்பட்டது.
ஆனால் ஆக்கப்பூர்வமாய் இத்துறையையும் பயன்படுத்திட இயலும் என்பதை நிரூபித்தவர் முஸ்தஃபா அக்காத். ஆம்…! “தி மெஸேஜ்” என்ற நபித்துவ வரலாறையும், “உமர் முக்தார்” என்ற போராட்ட வரலாற்றையும், கண் முன்னே நிறுத்தும் காவியமாய் இயக்கிய இயக்குனர்தான் இந்த அக்காத்.
இவரது முதல் படமான “தி மெஸேஜ்” தமிழுக்கு மொழிமாற்றம் செய்திட மிக நீண்ட “36 ஆண்டுகள்”காத்திருந்தது, ஆர்வத்திலும், சிந்தனையிலும் இச்சமூகத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எனினும் தற்போது வெளிவந்ததில் மகிழ்ச்சிதான். (பல வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் பார்த்தபோது, இது தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம் தீர்ந்தது.)
பல தடைகள் கடந்து இப்படம் 1977-ல் அரபி மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்தபோது, இப்படத்தைப் பற்றி இயக்குனர், “மேற்கத்திய உலகில் வாழும் முஸ்லிமாகிய நான், இஸ்லாத்தின் தெளிவுகளை உலகுக்கு உரைப்பதை கடமை எனக் கருதுகிறேன். மேற்கத்தியர்களுக்கும் இஸ்லாத்திற்க்குமுள்ள இடைவெளியை குறைக்கும் முகமாக இப்படம் இருக்கும்” எனக் குறிப்பிட்டார்.
[1930-ம் ஆண்டு சிரியாவில் பிறந்த முஸ்தஃபா, 2005 -ம் ஆண்டு ஜோர்டானில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் தன் மகளோடு படுகொலை செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது].
சரி திரைக்கதைக்கு வருவோம்…
நபியின் வரலாற்றை (இஸ்லாமிய வரலாற்றை) நபிகளாரைக் காட்சிப்படுத்தாமல் நபிமொழியின் நிழலில் எடுத்த படம் என்று சொன்னால் மிகச் சரியாக இருக்கும். ஆம்! நபியையோ, அவர்களின் மனைவியரையோ, பிள்ளைகளையோ, நான்கு கலீஃபாக்களையோ திரையில் காட்டாமல், நபிக்கான வசனங்களை பிறர் (அபூதாலிப், ஹம்ஸா, ஸைத்) மூலம் பேச வைத்து, நபிகளாரும் அக்காட்சியில் உள்ளார் என்று நமக்குப் புரிய வைக்கும் இயக்குனரின் திறமை பாராட்டத் தகுந்தது.
நபி (ஸல்) காலத்து ஆடை நாகரிகம், பழக்வழக்கங்கள், மக்கா, மதீனா நகரத்தின் அன்றைய தோற்றம் என அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குனர்.
ஏழ்மை நிலையானாலும், எளிய நிலையானாலும் ஏகத்துவத்தின் சுவை கண்ட பின் அதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்ற நபித்தோழர்களின் உறுதியைப் பறை சாற்றும் காட்சிகள் கண்களைக் குளமாக்குகின்றன.
பிலால் (ரலி) அவர்களின் நெஞ்சின் மீது கடும் பாறை ஏற்றுகையில் அவர் படும் துயரம் மனதை ரணமாக்குகிறது.
நபிகளாரின் 23 ஆண்டு கால வாழ்க்கையில் ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிப்பிட முடியா பொக்கிஷங்கள். அதன் சில முத்துக்கள்தான் இந்தத் திரைப்படம்.
துவக்க ஆண்டுகளின் சோதனைகள், நபிகளார் மற்றும் தோழர்களின் தியாகங்கள், எழுச்சிமிகு போராட்டங்கள், வல்லரசுகளுக்கும் வல்லோனின் அழைப்புகள், இறுதியில் வெற்றி என அற்புத வரலாற்றை அழகியலாய் இயம்பும் இத்திரைப்படத்தைத் தவறாது காண வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
மாற்றுமதச் சகோதரர்களுக்கும் பரிந்துரைப்பது (முடிந்தால் DVD பரிசளிப்பது) இயக்குனரின் நோக்கத்தை பூர்த்தி செய்யும்.
யாரேனும் செய்திருக்க வேண்டிய முயற்சியை, முன்னின்று செய்த மாஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனரும், தயாரிப்பாளருமான காயல்பட்டினத்தைச் சேர்ந்த K.M. முஹம்மது தம்பி அவர்களுக்கும், அவர்களோடு பணி புரிந்த நல்லுள்ளங்களுக்கும் ஸலாம்.
முஹம்மத் ஷாஃபி

No comments:
Post a Comment