கலவரத்தை தடுக்க இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக குஜராத் முதல்வர் மோடி இருக்கிறார். அவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ.க அறிவித்துள்ளது வருத்தத்துக்கு உரியது என்று சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க மதச் சுதந்திரத்திற்கான உறுப்பினர்கள் கத்ரினா லண்டோஸ் ஸ்வெட், மேரி ஆன் கிளெண்டான் ஆகியோர் ஊடகம் ஒன்றின் வலைப்பூவில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: குஜராத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி, பல மதங்கள் நிலவும் சமூகத்தில் சகிப்புத் தன்மையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வை, பரந்த மனப்பாண்மைக்கு முக்கியத்துவம் அளித்தார்.
வரும் 2014-ஆம் ஆண்டு (மக்களவை தேர்தல்) இந்தியா எதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போகிறது?மதச் சுதந்திரத்திற்கா?மத சகிப்புத் தன்மையின்மைக்கா? காலம்தான் இதற்கு பதிலளிக்கும். கலவரத்தை தடுப்பதில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக நரேந்திர மோடி இருக்கிறார்.2002 குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது அவர்தான் முதல்வராக இருந்தார். மோடி தலைமையிலான நிர்வாக சரியான நடவடிக்கை எடுக்காததை குஜராத் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. சேதப்படுத்தப்பட்ட வழிப்பாட்டுத் தலங்களுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மோடிக்கு விசா வழங்குவதை விலக்கி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை 2005-ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டது. மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 65 உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.க சார்பில் 2014-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது வருத்தம் தருவதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment