வெளிநாடுகளில் இருந்து அதிக மாணவர்கள் வருவதற்கு வசதியாக விசா நடைமுறைகளை எளிதாக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் குறிப்பாக ஆசிய நாடுகளில் இருந்து அதிகளவிலான மாணவர்கள் ஆஸ்திரேலியா சென்று படிக்கின்றனர்.
மாணவர் விசாவில் செல்லும் பலர், பகுதி நேர வேலையாக ஹோட்டல், பெட்ரோல் நிலையங்களில் வேலை செய்கின்றனர். அப்போது அந்நாட்டு இளைஞர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகம் நடந்தன.
இதன் காரணமாக முந்தைய ஆஸ்திரேலியா அரசு மாணவர் விசாவில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியது. இதனால் இந்தியா, சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால், ஆஸ்திரேலிய கல்வித்துறையின் வருவாயும் குறைந்தது.
இதனையடுத்து வெளிநாட்டு மாணவர்களை கவர விசா நடைமுறையை எளிமைப்படுத்த தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருந்து படிக்கவரும் மாணவர்களின் வங்கி கணக்கில், குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய் கணக்கு இருக்க வேண்டும் என முந்தைய விசா நடைமுறையில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த நிபந்தனையை தளர்த்த ஆஸ்திரேலியா அரசு முன்வந்துள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறை அமைச்சர் ஸ்காட் மாரிசன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கிரிஸ்டபர் பாயன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
நன்றி : அலி அஹமது - லண்டன்

No comments:
Post a Comment