“தினசரி காலை அரை மணிநேரம் ஐ.ஐ.டி மாணவர்களின் கணக்குகளை இன்டெர்நெட்டில் போட்டுப் பயிற்சி மேற்கொள்கிறார்” எனச் சமீபத்தில் ஒரு பத்திரிகை (Open, july 18, 2013) மோடி பற்றி எழுதியிருந்தது.
மோடியைச் சகல கலா வல்லவராகச் சித்திரிப்பதில் கார்பொரேட் மீடியாக்கள் போட்டி போடுகின்றன. “ரோம்போவைப் போலச் செயல்பட்டு மோடி 15,000 பேரை உத்தரகான்ட் வெள்ளத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்தார்” என்கிற தலைப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் (ஜூன் 22, 2013) விட்ட கதை அடுத்த சில நாட்களில் அம்பலப்பட்டது நமக்குத் தெரியும். 80 டயோடா கார்கள், நான்கு போயிங்களைத் தயாராக நிறுத்தி வைத்து தன் மாநில மக்களைக் கரை சேர்த்ததாகவும் அந்த நாளிதழ் கூறியிருந்தது.
மோடிக்குக் கூட்டம் சேர்வது உண்மைதான். தேர்தல் காலங்களில் எல்லோருக்கும்தான் கூட்டம் சேர்கின்றது. எனினும் மோடிக்குத் திரளும் கூட்டங்கள் பிரமாதப் படுத்தப் படுகின்றன. சென்ற மாதம் திருச்சியில் நடை பெற்ற பா.ஜ.கவின் இளந்தாமரை மாநாட்டிற்குத் திரண்ட கூட்டம் குறித்தும் இப்படித்தான் இங்குள்ள இதழ்கள் எழுதின. அதற்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் ஃப்லெக்ஸ் போர்ட் விளம்பரங்கள் வைக்கப்பட்டன என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழும இதழ்கள் பா.ஜ.க வின் கட்சி இதழ்களாகவே செயல்படுகின்றன. ‘தினத்தந்தி’ மற்றும் ‘புதிய தலைமுறை’ ஊடகங்களும் இன்று மோடியைத் தூக்கிப் பிடிக்கின்றன.
திருச்சியில் கூட்டப்பட்ட மக்களில் புதிய தலைமுறை பாரி வேந்தரின் ஆட்கள், அதாவது அவரது சாதிக்காரர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். பாரி வேந்தர் எனப்படும் பச்சமுத்து டெல்லி சென்று பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கைச் சந்தித்து வந்துள்ளார். தனது கட்சிக்கும் பா.ஜ.கவுக்கும் கொள்கையில் எந்த வேறுபாடும் இல்லை எனத் தெண்டனிட்டுள்ளார். புதிய தலைமுறையின் புதிய சானல் ஒன்றை மோடி தொடங்கி வைக்கிறார்.
அரசு நிதியைப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு, மோடி தன் பிம்பத்தை மக்கள் மத்தியில் ஊதிப் பெருக்கி வரும் கதை எல்லோரும் அறிந்ததே. இன்று இந்தப் பணியில் கார்பொரேட்களும் சேர்ந்துள்ளன. துணிந்து கொள்கை முடிவுகளை எடுக்கும் இரும்பு மனிதர் என்றும், வளர்ச்சியின் நாயகன் என்றும் அவரை முன்நிறுத்துகின்றன. MODIfying India என்றும் Modi for PM என்றும் முழக்கங்கள் உருவாக்குகின்றன. ‘குஜராத் மாடலில்’ இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று வீழ்ந்து விட்ட ரூபாய் மதிப்பை உயர்த்துவது, இன்னும் வானத்தை வில்லாக வளைப்பது உட்பட ஏகப்பட்ட சாகசங்களைச் செய்யப்போவதாகப் படங் காட்டுகின்றன.
எந்த அளவிற்கு இதெல்லாம் உண்மை?
ஒரு வகையில் மோடி இரும்பு மனிதர்தான். தானே முன்னின்று தன் அமைச்சர்களையும் விசுவாச அதிகாரிகளையும் தளபதிகளாக்கி 2000 முஸ்லிம்களைக் கொன்றும் இரண்டு லட்சம் பேர்களை இரண்டே நாட்களில் அகதிகளாக்கிச் சாதனை புரிவதற்கு எத்தனை இரும்பு இதயம் வேண்டும். இன்று வரை அதற்காக வருத்தம் ஏதும் தெரிவிக்காததோடு இவ்வாறு கொல்லப்பட்ட முஸ்லிம்களைத் தனது காரில் அடிபட்டுச் சாகும் நாய்க்குட்டிகள் எனச் சொல்வதென்பது சாதாரண மனிதர்களால் முடிகிற காரியமா? ஆனால் இளைஞர்கள் இந்த நிகழ்வைக் கடந்து போன ஒரு பழைய வரலாறாக மறக்கத் தொடங்கி விட்டதாக ‘புதிய தலைமுறை’ இதழாசிரியர் மாலன் ‘அவுட்லுக்’ இதழுக்குப் பேட்டி அளிக்கிறார்.
குஜராத்தின் “வளர்ச்சி”க்கதை எத்தனை அபத்தம் என்பது இப்போது பெரிய அளவில் அம்பலமாகியுள்ளது. வளர்ச்சி என்பதற்கான எந்த ஒரு அளவுகோலிலும் குஜராத் வேறெந்த இந்திய மாநிலங்களைக் காட்டிலும் முதலிடத்திலோ, ஏன் முன் வரிசையிலோ கூட இல்லை. கார்பொரேட்களே தங்கள் தொழில் முதலீடுகளுக்குக் குஜராத்தைத் தேர்வு செய்வதில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழகம் முதலான மாநிலங்களில்தான் வெளிநாட்டு முதலீடுகள் (FDI) குவிகின்றன. மின் பற்றாக்குறையே “இல்லாத” குஜராத்தைக் காட்டிலும் இந்திய மாநிலங்கள் 15ல் அதிக வீடுகள் மின் வசதி பெற்றுள்ளன. தமிழகம், ஹரியானா, பஞ்சாப், கேரளம் எல்லாம்தான் முன்னணியில் உள்ளன.
“ஊழல் இல்லாத தூய திறமையான நிர்வாகம்” நடப்பதாகச் சொல்லப்படும் குஜராத்தில் விதிகள் மீறப்பட்டுக் கார்பொரேட்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டதைக் குறைந்தபட்சம் இருமுறை சி.ஏ.ஜி (CAG) அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2011ம் ஆண்டு மனித வளர்ச்சி அறிக்கையிலும் குஜராத் 11வது இடத்தில்தான் உள்ளது. தமிழகம், ஹரியானா, பஞ்சாப், கெரளம் எல்லாம் குஜராத்தைக் காட்டிலும் வளர்ச்சி நிலையிலுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் குஜராத்திற்கு நான்காம் இடம்தான். இணையத்தில் இது குறித்து இன்னும் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. சுருக்கம் கருதித் தவிர்க்கிறேன்.
இந்த விஷயம் அம்பலப்பட்டுவிட்டதால் பா.ஜ.கவினர் இப்போது இது குறித்து அதிகம் வாய் திறப்பதில்லை. மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக இருப்பதை ஒரு சாதனையாகச் சொல்லிப் பார்க்கின்றனர். இன்னும் எத்தனையோ பேர் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர். சமகாலச் சாட்சிகளாக நவீன் பட்நாட்யக், தாருண் கோகோய், ஷீலா தீட்சித், மானிக் சர்க்கார் எனப் பலர் உள்ளனர்.
அதனால் இப்போது இது பற்றியும் வாய் திறப்பதில்லை.
நன்றி : அலி அஹமது - லண்டன்
No comments:
Post a Comment