மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் 950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு கடந்த 17 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கில், அம்மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என கடந்த 30 ஆம் தேதி ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்தது.
மேலும், இந்த வழக்கில் லாலு பிரசாத், ஜெகன்நாத் மிஸ்ரா மற்றும் ஜெகதீஷ் சர்மா எம்.பி. உள்பட 45 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். ஆனால், லாலு உள்ளிட்டோருக்கான தண்டனை விபரத்தை இன்று (03.10.13) அறிவிப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது.
அதன்படி, இவர்களுக்கான தண்டனை இன்று காணொளி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாக அறிவிக்கப்பட்டது. லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஜெகன்நாத் மிஸ்ரா:
மேலும் இவ்வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று முன்னாள் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரி பி.என். ஷர்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 1.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
எம்.பி. பதவி பறிபோகிறது:
2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் எம்.பி. பதவியை இழக்க நேரிடும் என்பதால், லாலு பிரசாத்தும், ஜெகதீஷ் சர்மாவும், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தங்களது பதவியை இழக்கிறார்கள். அதேபோல், அவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது.
காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூதுவுக்கு பிறகு எம்.பி. பதவியை இழக்கும் இரண்டாவது நபர் லாலு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக தண்டனை குறித்த வாதம் நடைபெற்றபோது, லாலுவுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்குமாறு சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொள்ள, லாலுவின் வழக்கறிஞரோ, பல்வேறு நோய்களினால் அவதிப்படுவதாகவும், எனவே அவருக்கு கருணை காட்டுமாறு நீதிபதியிடம் முறையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்முறையீடு:
இதனிடையே லாலுவுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment