தூத்துக்குடி அருகே பொறியியல் கல்லூரி முதல்வரை படுகொலை செய்தது ஏன்? என்பது பற்றி கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட டேனீஸ், பிச்சை கண்ணன், பிரபாகரன் ஆகிய 3 பேரும் போலீசாரிடம் முதலில் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் மூன்று பேரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தோம்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரி பேருந்தில் வந்த சில மாணவிகளை கிண்டல் செய்தோம். இதை சில மாணவர்கள் கண்டித்தனர். இதனால் அவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டது.
கல்லூரி முதல்வர் சுரேஷ் எங்கள் மூவரையும் கண்டித்தார். இதற்கு காரணமான மாணவர்களுடன் கல்லூரி வளாகத்தில் மீண்டும் தகராறு செய்தோம். இதையடுத்து பிச்சை கண்ணனை முதல்வர் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்தார். இரு நாட்களுக்கு முன்பு பிச்சை கண்ணன் உட்பட நாங்கள் மூன்று பேரும் முதல்வரை சந்தித்து சஸ்பெண்டை ரத்து செய்யும்படி வலியுறுத்தினோம்.
ஆனால் அவர் கண்டிப்புடன் பேசியதுடன், பிச்சை கண்ணனுக்கு ஆதரவாக செயல்பட்டால் எங்களையும் சஸ்பெண்ட் செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதற்காக பாளை மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் அரிவாள், கத்தியை வாங்கினோம். காரில் வந்து இறங்கிய முதல்வரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தோம்" என்று கூறியுள்ளனர்.
பிச்சை கண்ணன் வாக்குமூலம்:
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின்போது பிச்சை கண்ணன் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில்,"எங்கள் கல்லூரி முதல்வர் சுரேஷ் சிறிய சிறிய பிரச்னைகளுக்கெல்லாம் தண்டனை வழங்குவார். 5 நிமிடம் கல்லூரிக்கு தாமதமாக வந்தால் கூட ரூ.500 வரை அபராதம் விதிப்பார். நாங்கள் 3 பேரும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை எங்களால் கட்டமுடியவில்லை.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு டேனிசையும், பிரபாகரனையும் சஸ்பெண்ட் செய்தார். பெற்றோரை அழைத்து வந்தால்தான் கல்லூரியில் சேர்ப்பேன் என்று கூறியதால், 2பேரும் கல்லூரிக்கு பெற்றோரை அழைத்து வந்தனர். அப்போது பெற்றோர் முன்பு 2பேரையும் அவதூறாக பேசினார். இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி என்னை சஸ்பெண்ட் செய்தார். இதுபற்றி கேட்டபோது, மாணவிகளை கேலி செய்ததால் சஸ்பெண்ட் செய்துள்ளேன் என்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் எனது பெற்றோரையும் அழைத்து அவர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தினார். இதுபற்றி நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனிடம் கூறினேன். அப்போது பெற்றோர் முன்பு அவமானப்படுத்திய கல்லூரி முதல்வர் சுரேசை கொலை செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி நேற்று காலை கல்லூரிக்கு அரிவாளுடன் சென்றோம். கல்லூரி வளாகத்திற்குள் சென்றபோது அங்கு வந்த சுரேஷ், என்னை பார்த்து கடுமையாக திட்டினார். மேலும் என்னை படிக்க வைக்க விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனுடன் சேர்ந்து சுரேசை சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். கல்லூரி ஊழியர்கள் சேர்ந்து எங்கள் 3பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டனர்" என்று கூறியதாகவும், இதே கருத்தை மற்ற 2 மாணவர்களும் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment