சென்னை: குஜராத் மாநிலத்தையே சரியாக கவனிக்காத மோடியால் எப்படி நாட்டை நிர்வகிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன்.
மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தை பற்றி மிகைப்படுத்தி பல தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார். அந்த மாநிலத்தில் 2 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாக தகவல்கள் உள்ளன.
தனது மாநிலத்தையே சரியாக கவனிக்காத மோடியால் நாட்டை எப்படி முழுமையாக நிர்வகிக்க முடியும்? அவருக்கு தலைமை பண்பு உள்ளதா? என்பதே கேள்விக்குறி. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இலங்கை சென்றுள்ள மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் பேச்சு வார்த்தை நடத்துவார்.
சட்டத்துக்கு புறம்பாக தாது மணல் எடுப்பது கடல் வளத்தை பாதிக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் கேடு விளைவிக்கும். தற்போது இந்த தொழிலில் ஈடுபட்டு வேலை இழந்தவர்களுக்கு அந்தந்த மாநில அரசு தான் மறுவாழ்வு அளிக்க வேண்டும்" என்று கூறினார்.

No comments:
Post a Comment