முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Tuesday, 22 October 2013

நெல்பேட்டை முஸ்லிம்களின் உண்மை நிலை! (விகடன்)

காவல் துறையின் பதிவேட்டில் இந்தியாவையே அச்சுறுத்தும் பயங்கரவாதிகள் நடமாடும் டெரர் பூமியாக அடையாளம் காட்டப்படுவது இந்த நெல்பேட்டை போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான்!

 நெல்பேட்டையின் நிஜ முகம் தேடிப் புறப்பட்டோம்.
100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் 50-வது வார்டுதான் நெல் பேட்டை ஏரியா. ஆரம்பத்தில் நெல் மண்டிகள் ஏராளமாக இருந்த பகுதி என்பதால் நெல்பேட்டை என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். இன்று மீன் வியாபாரம், ஆட்டு இறைச்சிக் கடை, இரும்புப் பட்டறைகள், வெங்காய மண்டிகள், பூக்கடைகள் என்று மதுரையின் வணிக மையமாக இருக்கிறது நெல்பேட்டை.
எப்போதும் நெரிசல் மிகுந்த பகுதி இது. புறாக்கூண்டு போன்ற வீடுகளில் கழிவறை வசதிகூட இல்லாமல் மக்கள் வாழ்கிறார்கள். சாக்கடைகளும், குப்பை மேடுகளும்தான் அதன் அடையாளம். இங்கே  கூலித்தொழிலாளிகள் அதிகம். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இந்தப் பகுதி இளைஞர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதுவே தவறான வழிக்குச் செல்ல வழி வகுக்கிறது என்பதை நெல்பேட்டையின் முக்கியஸ் தர்கள் சிலர் ஒப்புக் கொள்கின்றனர்.
சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்துல் ரஹ்மானிடம் பேசினோம். 'இது, கடைகள் நிறைந்த பகுதி என்பதால் மக்கள் நடமாட்டமும் அதிகம். நாங்களும், இந்துக்களும் இணைந்து இங்கே வியாபாரம் செய்து வரு கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. போலீஸ்தான் இங்கு முதல் சிக்கலை ஏற்படுத்தியது. 
2002-ம் ஆண்டு பெங்களூருவில் இமாம் அலி, மாங்காய் பஷீர், முகமது இப் ராஹிம், சீனியப்பா, யாஸ்மின் ஆகிய ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை அவரவர் ஊர்களில் அடக்கம் செய்யாமல் நெல்பேட்டை ஜமாத்துக்குச் சொந்தமான மயானத்தில் அடக்கம் செய்தனர். அன்றில் இருந்துதான் வில்லங்கம் ஆரம்பமானது. அன்றுமுதல் போலீஸாரின் கண்காணிப்புக்குள் நெல்பேட்டை வந்தது. மார்க்கெட் பகுதியில் நடக்கும் சிறுசிறு சண்டைகள், குடும்பத் தகராறுகளுக்குக்கூட வழக்குப்பதிவு செய்தது. இப்படி 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன.  சின்னச் சின்ன சண்டைகளுக்காகப் போடப்பட்ட வழக்குகள் மூன்றுக்கு மேல் ஆனதும், அவர்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்துகிறது போலீஸ். 
குறிப்பிட்ட அதி காரிகள் அங்கிருந்து மாற்றலாகிப் போனதும் வட மாநிலத்தைச் சேர்ந்த போலீஸார் இங்கே வருகிறார்கள். அவர்கள் எங்களை தீவிரவாதிகளாகவே பார்க்கின்றனர். இதன் விளைவாகவே எங்கள் பகுதி இளைஞர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்கின்றன. எங்கள் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நாங்களே கண்காணிப்பு கேமரா பொருத்தி இங்கே வரும் அனைவரையும் கவனிக்கிறோம்'' என்று வேதனைப்பட்டார்.
இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மதுரை மாநகர மாவட்டத் துணைச் செயலாளர் ஜாஹிர் உசேனை சந்தித்தபோது, ''300 ஆண்டுகள் பழமையானது சுங்கம் பள்ளிவாசல். அப்படிப்பட்ட புனிதமான பகுதி இன்று பயங்கரவாதிகள் வாழும் பகுதியாக சித்திரிக்கப்படுவது வேதனை. எந்தக் குற்றப் பின்னணியும் இல்லாமல் எங்கள் பகுதியைக் குற்றவாளிகள் வாழும் சந்தேகத்துக்கு உரிய பகுதியாக மாற்றியுள்ளது போலீஸ். கொலை, அடுத்தவர் நிலத்தை  அபகரித்தல் உட்பட எட்டு குற்றங்களை  இஸ்லாம் மதம் ஏற்காது. தீவிரவாதத்தையும், மதவாதத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டதும் இல்லை. இந்த ஏரியாவில் முதல் குற்றச்சம்பவம் எப்போது நடந்ததோ, அப்போதே, சம்பந்தப்பட்டவர்களை ஏரியா வைவிட்டு வெளியேற்றியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அவர்களைக் களை எடுக்காமல் விட்டதன் விளைவு இன்று வினையாகி நிற்கிறது.
கொலைக் குற்றங்களில் சம்பந்தப்பட்டு ஜெயிலுக்குச் சென்று வருபவர்களுக்கு ஏரியாவில் இருப்பவர்கள் பயந்து வணக்கம் சொல்வதும், அவர்களுக்குப் பரிசுப் பொருட் கள் கொடுப்பதும் இளைஞர்களுக்கு முன்னு தாரணம் ஆகிவிடுகிறது. அவர்களைப் பார்த்து மற்ற இளைஞர்களும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தவறான பாதைக்குச் செல்கிறார்கள். இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். வெளிநாடுகளில் இருந்து இஸ்லாமிய இயக்கங்களுக்கு பணம் வருகிறது என்றால், எங்களுடைய மக்களின் வாழ்வு முன்னேறி இருக்க வேண்டுமல்லவா? நெல்பேட்டையில் அதே வீடுகள்... அதே சாக்கடைதானே இருக் கிறது. உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாத போலீஸ், இஸ்லாமியர் என் பதாலும், நெல்பேட்டை ஏரியாக்காரர்கள் என்பதாலும் இந்தப் பகுதி இளைஞர்கள் மீது வழக்குப்போட்டு பலரின் வாழ்க்கையை சீரழித்து விட்டது. இஸ்லாம் அமைப்புகள், இவர்களை நல்வழிப்படுத்துவதற்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை இனியாவது வழங்க வேண்டும். இவையெல்லாம் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை'' என்கிறார்.
அதுதான், எங்கள் ஏரியாக்காரர்கள் மீது போடப்பட்ட முதல் மதவழக்கு. அதன்பிறகு, 98-ல் பேராசிரியர் பரமசிவம் கொலை வழக்கில், போலீஸ் பக்ருதீன், இப்ராஹிம், சாகுல் உள்ளிட்ட மூன்று பேரையும் கைதுசெய்தனர். இது இரண்டாவது வழக்கு. அதன்பிறகுதான் தொடர்ச்சியாக மத வழக்குகள் எங்கள் பகுதியினர் மீது போடப்பட்டது'' என்று வரலாறு சொல்கின்றனர்.
போலீஸாரால் பொய் வழக்குகள் போடப் பட்டு பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிலரிடம் பேசினோம். ''எங்கள் பகுதிகளில் 18 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள் 5 ஆயிரம் பேர் இருக்கிறோம். இதில் குறைந்தபட்சம் 500 பேர் மீது வழக்குகள் உள்ளன. இவை எல்லாம் சின்னச்சின்ன வழக்குகள்தான். எங்கள் ஏரியா மிகவும் அமைதியான ஏரியா. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்தோம். 1995-ல் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எங்கள் ஏரியாவைச் சேர்ந்த சீனி நைனா முகமது, ராஜா உசேன் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். 

இமாம் அலி இந்த வட்டாரத்துடன் ஐக்கிய மானது குறித்து அவர்களிடமே கேட்டோம். ''ஒரு சில இளைஞர்கள் வறுமையில் வாடும்போது, செலவுக்கு பணம், வண்டி கொடுத்து இமாம் அலி பயன்படுத்திக் கொண்டார். அதில் சிலர் இமாம் அலியின் வலையில் விழுந்துவிட்டனர். மதுரைச் சிறையில் இருந்த இமாம் அலிக்கும், பக்ருதீனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தை வைத்துக்கொண்டு  சிறையில் இருந்து வெளியே வந்த போலீஸ் பக்ருதீன், சீனியப்பா தலைமையிலான டீம், சிறைக்கு கொண்டுசெல்லும் வழியில் போலீஸுடன் துப்பாக்கிச் சண்டையிட்டு இமாம் அலியை காப்பாற்றினர். அடுத்து, 2002-ல் காளிதாஸ் கொலை நடந்தது. இந்த வழக்கில் மன்னார் மொகைதீன், இம்ராஹிம் ஷா, அனீஸ், பிலால் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
அடுத்தடுத்த கைதுகளால் ஏரியா மேலும் டெரராகிக்கொண்டே போனது. போலீஸ் தொல் லையும் அதிகரித்தது. கண்ணில் சிக்கியவர்களை  ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் சித்ரவதை செய் கிறார்கள். ஊருக்குள் யார் கொல்லப்பட்டாலும் போலீஸ் பார்வை எங்கள் மீதுதான். ஒவ்வொரு வருடமும் இமாம் அலியின் நினைவு நாள் அன்று 2000 போலீஸாரை இங்கே குவிப்பார்கள். டிசம்பர் 6-ம் தேதியும் இந்த ஏரியா துப்பாக்கி ஏந்திய போலீஸ் வசமாகிவிடும்.
இந்த சின்ன ஏரியாவைச் சுற்றி, நெல்பேட்டை, ஓபலா படித்துறை, மார்க்கெட் ஆகிய இடங்களில் செக்போஸ்ட் அமைத்து இரவுபகலாக போலீஸ் கண்காணிக்கிறது. இரவு நேரங்களில் ஆற்றுக்கு அருகில் ஒண்ணுக்கு, ரெண்டுக்கு ஒதுங்கினாலே சந்தேக கேஸ் போடுறாங்க. வேலைகேட்டு எங்கே போனாலும், நெல்பேட்டை என்ற பெயரைக் கேட்டாலே எங்களை வேறு மாதிரியாகப் பார்க்கிறாங்க. சுதந்திர நாட்டில் நாங்கள் அடி மைகளாக வாழ்ந்துட்டு இருக்கோம்'' என்று வேதனையோடு சொன்னவர்கள் மேலும் சில விஷயங்களையும் கூறினர்.
''இங்கிருக்கும் ஜமாத்துகள், முஸ்லிம் அமைப்புகள் ஒருவன் துன்பப்படும்போதும், போலீஸ் சித்ரவதைகளுக்கு ஆளாகும்போதும், படிப்புக்காகவும், வேலைக்காகவும் கடன் கேட்டு அனாதைகளாக நிற்கும் போதும் உதவி செய்வதில்லை. ஆனால் மதம் பற்றியோ, மதத்தின் பெயரால் மிகப்பெரிய தவறு செய்த குற்றவாளிகளுக்கு  எதுவானாலும் முதல்ஆளாக ஓடி வருகிறார்கள். இருப்பவன் இல்லாதவன் என்ற பேதம் இங்கேயும் இருப்பதுதான் வேதனை. மாப்பாளையம், புதூர், கோரிப்பாளையம், காஜிமார் தெரு, தெற்கு வாசல் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ஆனால், நெல்பேட்டையைப் போல வறுமையாக, இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் யாரும் இல்லை. இது, இஸ்லாமியர்கள் வாழும் சேரி. இந்தச் சேரியை சீரமைத்து, கல்வி, வேலை வாய்ப்பு விளையாட்டு, சமூக அக்கறை, தேசப்பற்று என நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை'' என்றார்கள்.
மாற்றத்துக்காக காத்திருக்கிறார்கள்  நெல்பேட்டை ஏரியா வாசிகள்!
சண்.சரவணக்குமார், செ.சல்மான்
படங்கள்: இ.பொன்குன்றம்
 இரும்பு அடிச் சத்தம் கேட்கும்!
 மதுரை மாநகரின் மையப்பகுதியில் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் நெல் பேட்டை, ஒட்டுமொத்த நகருக்கும் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் கேந்திரமாக விளங்குகிறது. பிரிட்டிஷ் காலத்திலிருந்து தென்மாவட்டத்தில் விளைவிக் கப்படும் நெல் மற்றும் தானிய வகைகள் இங்குதான் சந்தைப்படுத்தப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வருவார்கள். மொத்த தானியங்களிலிருந்து கழிக்கப்படும் தவிடுகளை விற்பனை செய்ய உருவான பகுதி, இப்போதும் தவிட்டுச்சந்தை என்று அழைக்கப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, அரசாங்கத்தின் நெல் கொள்முதல் நிலையம் இங்குதான் செயல்பட்டது. இடநெருக்கடி ஏற்பட்டதால், மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட்டது.
இப்போதும் ஒரு நாளைக்கு பத்து லட்ச ரூபாய் வரை மீன் விற்பனை நடக்கிறது. பித்தளை, இரும்பு பாத்திரங்கள், கிராதிகள் செய்யும் பட்டறைகள் இந்தப் பகுதி முழுக்க நிரம்பியுள்ளன. பட்டறைக்காரத் தெரு என்றே இங்கு ஒரு தெரு இருக்கிறது. இங்கே எந்த நேரமும் இரும்படி சத்தம் கேட்டபடியே இருக்கிறது.
முழுக்க முஸ்லிம்கள் அல்ல!
நெல்பேட்டையில் உள்ள 10 ஆயிரம் வாக்காளர்களில் 7 ஆயிரம் பேர் முஸ் லிம்கள். மீதி உள்ள 3 ஆயிரம் பேரில் செட்டியார்களும், நாடார்களும் அதிகம். இங்குள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தும் யாதவர்களுக்குச் சொந்தமானது. மளிகைக் கடைகளை செட்டியார்கள் நடத்துகிறார்கள்.  இதனால்  காலையிலிருந்து மாலை வரை மக்கள் நெரிசலை இங்கு காணலாம் நெல்பேட்டைக்குள் நாடார் சமூகத்தின் பள்ளியும் செட்டியார் சமூகத்தினரின் பள்ளிகளும் இயங்குகின்றன.  
 பார்ப்பவர் முகத்தில் பயம்!
 நெல்பேட்டையில் வசிக்கும் முஸ்லிம் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அன்றாடம் காய்ச்சிகள்தான். ஏரியாவுக்குள் புதிதாக யார் வந்தாலும் மிரட்சியாகப் பார்க்கின்றனர். எல்லாம் போலீஸ் ஏற்படுத்திய வலி. தமிழகத்தில் எங்கு குற்றம் நடந்தாலும், இங்கிருக்கும் நபர்கள்தான் விசாரணைக்கு முதலில் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்தக் கொடுமையை எந்த அரசியல் கட்சியும், மனித உரிமை அமைப்புகளும் கேள்வி கேட்காதது போலீஸுக்கு சாதகமாகிவிட்டது.
தமிழகத்தில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளான நெல்லை மேலப்பாளையம், கோவை கோட்டைமேடு, திருச்சி பாலக்கரை, ராமநாதபுரம் கீழக்கரை, அதிராமபட்டினம், வேலூர் போன்ற பகுதிகளை குற்றவாளிகள் நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை யார் மனதில் உதித்ததோ தெரியவில்லை. யாரோ செய்த பாவங்களுக்கு இவர்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர் என்பதுதான் கொடுமை.
-ஜூனியர் விகடனிலிருந்து...

No comments:

Post a Comment