ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் நேற்று மாலை அறிவித்தார்.
அதன்படி, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 25-ந்தேதியும், ராஜஸ்தானில் டிசம்பர் 1-ந்தேதியும், டெல்லி மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு டிச.4-ந்தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். மேலும், சத்தீஷ்கர் மாநிலத்தில் நவம்பர் 11 மற்றும் 19- ந்தேதியில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4-ந்தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ந்தேதி எண்ணப்படுகின்றன.
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக எதிர்வரும் 5 மாநில தேர்தலில் போட்டியில் எந்த வேட்பாளரையும் வாக்காளர்களுக்கு பிடிக்காமல் போனால் ‘மேற்கண்டவர்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ NOTA (none of the above) என்ற பொத்தான்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் அமைக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
எந்த வேட்பாளர்களையும் தேர்வு செய்ய விருப்பமில்லை என்று வாக்காளர்கள் தங்களின் கருத்தை பதிவு செய்யும் வசதியை தேர்தல் கமிஷன் உருவாக்கி தர வேண்டும் என கடந்த (செப்டம்பர்) மாதம் 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதை தொடர்ந்து தேர்தல் கமிஷன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வேட்பாளர்கள் பட்டியலில் கடைசி பெயரின் கீழே NOTA பொத்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

No comments:
Post a Comment