திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காட்டில் ஊராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படும். இப்பள்ளியில் நேற்று மதியம் மாணவ– மாணவிகளுக்கு சாம்பார் சாதம், வேக வைத்த முட்டை ஆகியவை வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட மாணவ–மாணவிகளுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆனந்தராஜ், குமரவேல், மாணவிகள் துர்கா, சுபாஷினி, ஆனந்த தர்சினி, நந்தினி, பிரியதர்சினி, பிருந்தா, கோபிகா, கஸ்தூரி, ராகவி ஆகியோரை ஆசிரியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர்கள் முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் மாணவ– மாணவிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
இப்பள்ளியில் 12 மூட்டை அரிசிகள் சமையலுக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததால் அதனை சமையலுக்கு பயன்படுத்தாமல் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்த அரிசியை எடுத்து சமைத்ததால் மாணவ–மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment