லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியர்களை விஷவாயு செலுத்தி கொல்ல முயன்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வரலாற்று புத்தக ஆசிரியர் கைல்ஸ் மில்டன். விக்டவுன் புத்தக விழாவில் கலந்து கொண்டு தனது புதிய புத்தகமான ரஷ்யன் ரூலெட் குறித்து பேசுகையில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் கூறும் போது "முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் தொல்லை கொடுத்து வந்த பழங்குடியின மக்களை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கொல்ல சர்ச்சில் விரும்பினார்.
இது குறித்த கடிதத்தையும் அவர் இந்திய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அதில், வடகிழக்கு பகுதியில் உள்ளவர்கள் மிகவும் தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களை விஷவாயு செலுத்தி கொன்று விடுவோம் என்று தெரிவித்திருந்தார். இந்த மெமோவை அனுப்பிய போது சர்ச்சில் இங்கிலாந்து பிரதமர் கிடையாது.
இங்கிலாந்து நாட்டவர் பரம ரகசியமாக எம் டிவைஸ் என்ற பயங்கர ரசாயன ஆயுதத்தை வில்ட்ஷயரில் உள்ள போர்டன் லபாரடரீஸில் தயாரித்தனர். இது வரை தயாரிக்கப்பட்ட ரசாயன ஆயுதங்களிலேயே இது தான் மிகவும் மோசமானது. அதை தயாரித்தார்கள் ஆனால் பயன்படுத்தவில்லை. இந்த எம் டிவைஸை ரஷ்யாவின் போல்ஷெவிக்ஸுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்பது தான் சர்ச்சிலின் திட்டம்." என்று அவர் தெரிவித்தார்.
மேலும் "சர்ச்சில் பிரிட்டனின் சிறந்த தலைவர் தான் , ஆனால் அவரின் குணத்திற்கு மறுபக்கமும் உண்டு. அவர் ரசாயன ஆயுத பயன்பாட்டை ஊக்குவித்தவர்" என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment