கழிவறை குறித்து பேசிய மோடியை கழிவறை திட்டத்திற்கான பிராண்ட் அம்பாசிடராக நியமிக்க வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சி மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கழிவறைக்கு முதலில் முக்கியத்துவம் பிறகே கோவிலுக்கு இடம் என்று பேசிய குஜராத் முதல்வர் மோடிக்கு பல்வேறு கட்சிகளும் ஹிந்துத்துவா இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சிவசேனாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டிருப்பதாவது; ‘நரேந்திர மோடி தனது கருத்துக்கு நிச்சயமாக விளைவுகளை சந்திப்பார். முதலில் கழிவறை, பின்னர் கோவில் என்று கூறியதன் மூலம் மோடி தைரியமான சிந்தனையை முன்வைத்து உள்ளார். ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் என்ன கூறினாரோ, அதையே மோடியும் சொல்லி உள்ளார். எனவே கழிவறை திட்டத்திற்கான பிராண்ட் அம்பாசிடராக மோடியை காங்கிரஸ் கட்சி நியமிக்க வேண்டும். இதற்கான ஊதியத்தை பா.ஜனதாவிடம் அவர்கள் செலுத்த வேண்டும்.
முன்பு இதே கருத்தை ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தபோது பா.ஜனதா மற்றும் விசுவ இந்து பரிஷத், சங்க்பரிவார் அமைப்பினர் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தற்போது நரேந்திர மோடிக்கு அவர்களே அடைக்கலம் கொடுத்து வருகிறார்கள்.
மோடியின் பேச்சின் மூலம் நம்மால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். நாம் அனைவரும் கழிவறை கட்டுவதில் பங்கேற்க வேண்டும். கோவில் கட்டுவதை பொறுத்தவரை, பின்னர் பார்த்துக்கொள்ளலாம். என்பதே அது.
இதிலிருந்து என்ன புரிகின்றது என்றால், நரேந்திர மோடியின் தற்போதைய நிலைப்பாட்டை அவர் சார்ந்திருக்கும் கட்சியினராலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. மோடி வழிநடத்துகிறார், பா.ஜனதாவினர் பின்பற்றுகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகி உள்ளது.’ என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment