முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Tuesday, 8 October 2013

பயணச்சீட்டு இல்லாமலே விமானத்தில் பறந்த சிறுவன்! இதுதான் அமெரிக்காவின் அதிநவீன பாதுகாப்பு?

மெரிக்க நாட்டில்  சிறுவன் ஒருவன் பயணச்சீட்டு இல்லாமல் விமானத்தில் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ளா மின்னபோலிஸ் நகரைச் சார்ந்த  9 வயது சிறுவன் ஒருவன் அந்நகரத்திலுள்ள செயின்ட் பால் விமான நிலையத்திற்கு சென்று, பயணிகளோடு சேர்ந்து விமானம் புறப்படும் இடத்திற்கு சென்று விட்டான்.

பயணச்சீட்டு இல்லாமலேயே பாதுகாப்பு மற்றும் பரிசோதனை பகுதியையும் கடந்து விமானம் நின்ற இடத்திற்கு மற்ற பயணிகளோடு சென்றவன், விமான சிப்பந்திகள் மற்றவர்களின் பயணச்சீட்டை பரிசோதிக்கும் வேளையில், விமானத்தினுள் நுழைந்து இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவனை விசாரித்த சிப்பந்திகளிடம், பெற்றோர் பின்னால் இருப்பதாக கூறியுள்ளான். எனினும், விமான பணிப்பெண்ணுக்கு சந்தேகம் வந்து, பயணிகளின் பட்டியலை சரிபார்த்த போது, சிறுவனின் பெயர் இல்லை. எனவே, விமானம் லாஸ் வேகாஸ் நகரில் தரையிறங்கியதும், விமான பணியாளர்கள் சிறுவனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிறுவனிடம் விசாரணை நடத்தி விட்டு, மின்னபோலிஸ் நகருக்கு திருப்பி அனுப்பி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து அவனது தாயார் கூறும் போது, "நண்பனின் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவனை காணாததால், காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம்" என்றார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கூறும் போது, "இச்சிறுவன் குறும்புக்காரனாக இருக்கிறான். இவனது குறும்புக்காகவே பள்ளிக்கூடத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறான். இதற்கு முன்பும் விமான நிலையத்தில் நுழைய முயன்று,  பிடிபட்டிருக்கிறான். விமான நிலையத்தில் நுழைவது இவனுக்கு பொழுது போக்காக இருக்கிறது" என்றனர்.
உலகிலேயே தனது நாட்டை அதிகமான பாதுகாப்பு நிறைந்ததாக கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் விமான நிலையத்தில், ஒரு சிறுவன் பயணச்சீட்டு இல்லாமல், பாதுகாப்பு வளையத்தையும் மீறி விமானத்திலேயே பயணம் செய்திருப்பது, அந்நாட்டின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

No comments:

Post a Comment