முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Thursday, 3 October 2013

அரசியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் அவசரச் சட்டம் வாபஸ்! மத்திய அமைச்சரவை முடிவு!

கிரிமினல்  வழக்குகளில் 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியை உடனே பறிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. குற்ற வழக்குகளில் 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 10 ந்தேதி அதிரடி தீர்ப்பை வெளியிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பல் எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும் நிலை உருவானது.
இந்த நிலையில் கிரிமினல் அரசியல்வாதிகளை காப்பாற்றி அவர்களுக்கு துணை போகும் வகையில் மத்திய அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8 வது பிரிவில் சில மாற்றங்களை செய்தது. அதன் மூலம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 2 ஆண்டு தண்டனை பெற்றாலும் பதவியில் நீடிக்க வழி வகை செய்யப்பட்டது.
இந்த திருத்தத்தை அவசரச் சட்டமாக செயல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் கொடுத்தது. ஆனால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவித்த பா.ஜ.க. பின்னர் அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி அவசரச் சட்டம் முட்டாள் தனமானது. அதனை கிழித்து குப்பையில் தூக்கி எறிய வேண்டும் என்றதால் சர்ச்சை வெடித்தது.
இவ்வாறான எதிர்ப்பால் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை.
இந்த இக்கட்டான நேரத்தில் அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன்சிங் நேற்றிரவு நாடு திரும்பினார். இன்று காலை அவரை ராகுல் சந்தித்து அவசரச் சட்டத்தை வாபஸ் பெற கோரி வலியுறுத்தினார். அதை மன்மோகன் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
ராகுல் சந்திப்பைத் தொடர்ந்து 10.55 மணிக்கு காங்கிரஸ் உயர் நிலைக் கூட்டம் மன்மோகன்சிங் வீட்டில் சோனியா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு சட்ட அமைச்சர் கபில்சிபலும் அழைக்கப்பட்டிருந்தார். அந்த கூட்டத்திலும் அவசரச் சட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் அவசரச் சட்டத்தை திரும்ப பெறுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவசரச் சட்டத்தை திரும்ப பெறுவது தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டுப் பெறுவது என்றும் உயர்நிலைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டம் சரியாக 11.38 மணிக்கு முடிந்தது. 43 நிமிடங்கள் காங்கிரஸ் உயர் நிலைக் குழு கூட்டம் நடந்தது.
அதன்பிறகு பிரதமர் மன்மோகன்சிங் 12.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை 12.30 மணிக்கு சந்தித்து பேசினார். அவசரச் சட்டம் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார். அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தை மன்மோகன்சிங் விளக்கமாக ஜனாதிபதியிடம் கூறினார்.
இன்று மாலை 6 மணிக்கு மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் அவசரச் சட்டத்தை திரும்பப் பெறுவது பற்றி விவாதிக்கப்பட்டு, இறுதியாக மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

1 comment: